Saturday, 10 December 2011


பெங்களூரை சேர்ந்த திருநங்கை தனுஸ்ரீ: சிறந்த அழகி- 2011 பட்டம் வென்றார்
 
பதிவு செய்த நாள் : ஏப்ரல் 18,2011,23:52 IST
விழுப்புரம்: தாய் திட்டம் தமிழ்நாடு மற்றும் தாய் விழுதுகள் கூட்டமைப்பு இணைந்து ""சிறந்த திருநங்கை-2011'' அழகி மற்றும் நடன போட்டி விழுப்புரத்தில் நடந்தது.

விழுப்புரம் நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திட்ட இயக்குனர் விஜயராமன் தலைமை தாங்கினார். டாக்டர் லட்சுமிராய், ஆரோக்கியம் மற்றும் ஆன்மிக வாழ்க்கை பற்றி கூறினார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு இணை இயக்குநர் ஜேம்ஸ் பாண்டியன், சேர்மன் ஜனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அமைச்சர் பொன்முடி பேசியதாவது, தமிழ்நாட்டில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மக்கள் எங்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மீண்டும் 6வது முறையாக கருணாநிதி அரியணை ஏற வாக்களித்துள்ளனர். அதே போல் இன்று திருநங்கைகள் தினம் அறிவித்துள்ள கருணாநிதிக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்துள்ளனர். திருநங்கைகள் தினம், தனி நலவாரியம் இவைகளை மனிதாபிமான உணர்வோடு வழங்கியவர் கருணாநிதி. பள்ளி மாணவர்களுக்கு இருக்கைகள், கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகளை நிறைவேற்றி கொடுத்தது கருணாநிதி அரசு. அந்த மனிதாபிமான உணர்வோடு கொடுக்கப்பட்ட அரசுக்கு நன்றி தெரிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். விழுப்புரம் நகரில் கூடியவரை உங்களுக்கு சேவை செய்பவராக நகரமன்ற தலைவர் ஜனகராஜ் உள்ளார். திருநங்கைகள் இப்போட்டியில் மட்டுமின்றி வாழ்வில் அனைத்து போட்டிகளிலும் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.


அதனை தொடர்ந்து திருநங்கைகள் தினம் அறிவித்த முதல்வர் கருணாநிதிக்கு அனைத்து திருநங்கைகளும் ஒளி விளக்கு ஏந்தி நன்றி செலுத்தினர். பின் சிறந்த திருநங்கை 2011 அழகிப்போட்டி நடந்தது. இதில் சிறந்த திருநங்கை-2011 பட்டத்தை பெங்களூரு தனுஸ்ரீ வென்றார். 2ம் இடத்தை அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜானா மோயின்தால், மூன்றாமிடத்தை தூத்துக்குடியை சேர்ந்த ரங்கீலா, 4வது இடத்தை அசாம் மாநிலத்தை சேர்ந்த ஹானா ஆகியோர் பிடித்தனர். அழகிகளுக்கான பட்டத்தை டாக்டர் லட்சுமிராய் ஆரோக்கியம் சூட்டினார். நடன போட்டிக்கான முதல் பரிசை கோயம்புத்தூரை சேர்ந்த சபீனா வென்றார். தூத்துக்குடியை சேர்ந்த சுஜி இரண்டாம் இடத்தையும், சேலம் சிந்து, மதுரை பழனியம்மாள் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கான ரொக்க பரிசை எய்ட்ஸ் கட்டுப்பாடு இணை இயக்குநர் ஜேம்ஸ் பாண்டியன் வழங்கினார்.

சிறந்த திருநங்கை பேட்டி: சிறந்த திருநங்கை-2011 பட்டம் வென்ற பெங்களூரு தனுஸ்ரீ நிருபர்களிடம் கூறியதாவது, முதன்முறையாக விழுப்புரத்திற்கு வந்து இந்த பட்டம் வென்றது மிகவும் பெருமையளிக்கிறது. நான் பி.ஏ., பொருளாதாரம் படித்துள்ளேன். சிறந்த திருநங்கை பட்டம் பெற்ற நான், என்னால் முடிந்த வரை மற்றவர்களுக்கு சிறந்த சேவை செய்வேன். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் கூவாகம் திருவிழாவிற்கு வருகை தந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வேன். இவ்வாறு தனுஸ்ரீ கூறினார்.

No comments:

Post a Comment