கருத்தை பதிவு செய்ய
நாமக்கல்: வீட்டை காலி செய்ய வற்புறுத்தி, தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருநங்கைகள் புகார் செய்தது குறித்து, போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல், மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் திருநங்கை காவியா (35). அவர் உள்ளிட்ட சில திருநங்கைகள், அத்தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் காவியா உள்ளிட்ட திருநங்கைகளை, வீட்டை காலி செய்து வெளியேறும்படி அங்கிருந்த சிலர் தெரிவித்துள்ளனர். அதற்கு காவியா உள்ளிட்ட திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று, நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனில் ஏராளமான திருநங்கைகள் குவிந்தனர். பின், காவியா உள்ளிட்ட திருநங்கைகளை வீட்டை காலி செய்யும்படி வலியுறுத்தி தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் செய்தனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட திருநங்கைகள், சிறு குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்க்கின்றனர். திருநங்கைகள் வெளியூர் செல்லும்போது, அந்தக் குழந்தையை வீட்டில் வைத்து பூட்டிச் சென்று விடுகின்றனர். அக்குழந்தை பூட்டிய வீட்டினுள் அழுவது, அருகே வசிப்பவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறது. எனவே, திருநங்கைகளை வீட்டை விட்டு காலி செய்யும்படி தெரிவித்ததாக, திருநங்கைகள் மீது போலீஸ் ஸ்டேஷனில், அப்பகுதி மக்கள் புகார் செய்துள்ளனர். இரு தரப்பினர் அளித்த புகார் குறித்து, போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.